பின்பற்றுபவர்கள்

சனி, 29 ஜூன், 2013

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

எண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

சந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந்திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ “வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்” என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த “அண்ணனுக்கு ஜே” படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் “உங்கப்பனுக்கும் பே பே” என்று “ராஜா சின்ன ரோஜா”விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள்.


1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் ‘இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே” ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.

இப்படி சொல்பவர் கானாபிரபா...

நன்றி: http://www.radio.kanapraba.com

இதயத்தை மயிலிரகால் வருடுவது போல ஒரு பாடல் மறைந்த திரு சந்திரபோஸ் அவர்களிடம் இருந்து. நடிகர் ராம்ஜிகென S P B மிக மென்மையாக பாடியிருக்கிறார்.

எவ்வளவோ முயன்றும் பாடல் காட்சி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். பாடல் காட்சி கிடைத்து இன்று இங்கே தரமேற்றியிருக்கிறேன். ரசிப்போம்..

திரைப் படம்: வடிவங்கள் (1982)

நடிப்பு: ராம்ஜி (ராம்ஜி வேறு ராம்கி வேறா?), ராதிகா???

இயக்கம்: மதுக்கூர் கண்ணன்

குரல்கள்: S P B, வாணி ஜெயராம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xNDkyNTk5MF94ZEJOZ19iZDNi/IdhayaVaanil.mp3











இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்பு தருகின்றதே

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்பு தருகின்றதே

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

கரையோரம் அலைகளே விளையாடும் பொழுதிலே
ஆசைக்கு முடி சூட்டவா
இமையோரம் விழிகளே கதை பேசும் நிலையிலே
இன்பங்கள் நெஞ்சோடு உறவாடுமே

இது என்ன கூந்தலா
மலாராடும் ஊஞ்சலா
இதழென்ன தேனடைதானோ
நீயே என் கண்மணி
சுவையூரும் மாங்கனி
சிந்தாமல் சிரிக்கின்ற சிந்தாமணி

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

ல லா லா லா லா ல

செதுக்காத சிற்பமோ
படிக்காத நாவலோ
சிங்கார கலைக் கூடமோ
கவி பாடும் வேளையில்
ரவிவர்மன் ஓவியம்
கண்ணான கண்ணே உன் உருவானதோ

ஒரு கோடி ஆசைகள்
உள்ளத்தின் ஓசைகள்
உருவாகும் சங்கீதமே
உன் பார்வை மோகனம்
நானே உன் சீதனம்
உனக்காக என்றென்றும் நான் சொந்தமே
இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

வசந்தங்கள் அழைக்கின்றதே

வரவேற்பு தருகின்றதே
ந ந ந நான ந ந ந நானன ந ந ந நான நா
ந ந ந நான ந ந ந நானன ந ந ந நான நா

1 கருத்து:

ஒசை சொன்னது…

அருமையான பாடல். பாடலை இயற்றிய மதுக்கூர் கண்ணனே, இப்படத்தின் இயக்குனர். பின்னாளில் சக்தி-கண்ணனாக, யார் கண்ணனாக அவதாரமெடுத்தார். உதிரிப்பூக்கள் மகேந்திரனிடம் உதவியாளராக இருந்தவர். இவர் எழுதிய பாடலே நண்டு படத்தில் இடம் பெற்ற "அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா" பாடல்.

கருத்துரையிடுக