பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

மாடு மேய்க்கும் கண்ணே- நீ

thenkinnam.blogspot.com
இந்தத் தளத்தில் கீழ்கண்ட பாடலை கேட்ட/பார்த்த உடன் நமது நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்பினேன். பலர் இதற்கு முன் இந்தப் பாடல் காட்சியை பார்த்திருக்கலாம். ஆனாலும் மறுமுறையும் இதை பார்ப்பதில் அலுப்பிருக்காது என நம்புகிறேன்.

இது போன்ற ஜன ரஞ்சகமான பாடல்களும் இந்த உற்சவத்தில் பாடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் ரொம்பவும் ரசித்து கேட்ட/பார்த்த பாடல். பாடிய அம்மையாருக்கு அவ்வளவாக தமிழ் வாராதோ? ஆனாலும் இனிமைதான். என்ன ஒரு முக பாவம்? அருமை.

நாளை மீண்டும் நமது வழமையான திரைப் பாடல்களுடன் சந்திப்போம்.




மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்
மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்
காய்ச்சின பாலு தரேன்
கல்கண்டுச் சீனி தரேன்
காய்ச்சின பாலு தரேன்

கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன்
வெய்யிலிலே போக வேண்டாம்
மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேண்டாம் சொன்னேன்

காய்ச்சின பாலும் வேண்டாம்
கல்கண்டுச் சீனி வேண்டாம்
காய்ச்சின பாலும் வேண்டாம்

கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து
ஒரு நொடியில் திரும்பிடுவேன்
உல்லாசமாய் மாடு மேய்த்து
ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

யமுனா நதிக் கரையில் 
எப்பொழுதும் கள்வர் பயம்
யமுனா நதிக் கரையில் 

எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் 
கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே
நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ
கண்டதுண்டோ சொல்லும் அம்மா
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ

கண்டதுண்டோ சொல்லும் அம்மா
கள்வர் வந்து எனை அடித்தால் 
கண்ட துண்டம் செய்திடுவேன்
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

கோவர்த்தன கிரியில் 
கோரமான மிருகங்கள் உண்டு
கோவர்த்தன கிரியில் 

கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் 
கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே 
நீ போகவேண்டாம் சொன்னேன்

காட்டு மிருகமெல்லாம் 
என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் 
வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


பாசமுள்ள நந்தகோபர் 
பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா 
என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே 
நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே 
பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே 
ஓடி வந்து நின்றிடுவேன்

போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

சிறிய ஒரு உரையாடலை எளிமையான வார்த்தைகளை அழகான இசையாய் வடித்திருப்பது மிக இனிமை. ஆனால் ஒரு கர்நாடக இசை வல்லுனர் தமிழை உச்சரித்திருக்கும் விதம் ஏற்கும் படியாக இல்லை.

கருத்துரையிடுக