பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 செப்டம்பர், 2014

கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் Kamalam paatha kamalam

இவ்வுலகம் இசையில் எந்நேரமும் மூழ்கியிருக்கிறது. இரவு நேரங்களில் ஊரின் சந்தடி அடங்கிய பிறகு நாம் நம் வீட்டுக்கு வெளியில் குறிப்பாக மொட்டை மாடிக்குச் சென்று மனதில் எழும் இதர சிந்தனைகளை விடுத்து நம் செவிகளால் கூர்ந்து கவனித்துக் கேட்போமாகில் இவ்வுண்மை நமக்கு விளங்கும். நாம் கண்ணால் காண இயலாத உயிரினங்கள் ஒவ்வொரு இரவிலும் எழுப்பும் சில்லென்ற ரீங்கார ஒலியை நம் காதுகள் உணரத் தவறுவதில்லை. மனதை உலக சிந்தனைகளிலிருந்து திருப்பி ஒருமுகப்படுத்தும் வல்லமை வாய்ந்தது இசை ஒன்றேயாகும். இதன் காரணமாகவே இறைவனைத் தொழுவதற்கு ஏற்ற சாதனமாக இசை விளங்குகின்றது. எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் பிரார்த்தனை செய்ய இசையின் துணையையே நாடுகின்றனர். 

இசையை ரசிக்க்காத உயிரினங்கள் ஏதும் உலகில் இல்லை. எனினும் இசை பல வடிவங்களில் திகழ்கையில் ஒவ்வொரு வடிவமும் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களுக்குப் பிரியமானதாக விளங்கக்கூடும். பாம்புகளுக்குப் பிரியமான இசை புன்னாகவராளி ராகம் என்பது பிரசித்தி. குழந்தைகளுக்குப் பிரியமான ராகம் நீலாம்பரி. அம்ருதவர்ஷிணி எனும் ராகத்தை முறையாகப் பாடினால் நிச்சயம் மழை பெய்யும் என்பதும் மிகப் பிரசித்தி. ஒரு சமயம் இலங்கேஸ்வரனாகிய இராவணன் சிவபெருமானும், பார்வதி தேவியும் எழுந்தருளிய திருக்கயிலாயத்தைப் பெயர்த்தெடுக்க முயல்கையில் பார்வதி தேவி பதற்றமுறவே சிவபெருமான் தனது கட்டை விரலால் அழுத்த இராவணன் மலைக்கடியில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடிப் போனானாம். தன் பிழையை உணர்ந்து தன்னைக் காத்தருளுமறு வேண்டி சிவபக்தனாகிய இராவணன் தன் தலைகளில் ஒன்றையும் தன் கைகளில் ஒன்றையும் பிய்த்து அவற்றுடன் தன் நரம்புகளையே தந்திகளாகக் கொண்ட ஒரு வீணையை உருவாக்கி, அவ்வீணையை மீட்டியவாறு சாமகானம் பாட, அவனது இசையைக் கேட்டு மகிழ்ந்து சிவபெருமான் கருணை கொண்டு அவனை விடுவித்ததாகப் புராணம் சொல்கிறது. இராவணன் வீணையை மீட்டி அப்பொழுது பாடிய ராகம் காம்போதி. வீணை மீட்டிப் பாடுவதில் இராவணனுக்கு நிகர் எவருமில்லை என்பது பிரசித்தம். இராவணனை வீணை மீட்டிப் பாடுவதில் வெற்றி கண்டவர் அகத்திய முனிவர் ஒருவரே ஆவார். 

இசை நம் அனைவரின் துயர் தீர்க்கும் மருந்தாக வல்லது. தீராத நோய்வாய்ப்பட்டவரையும் அந்நோயிலிருந்து பரிபூரணமாய்க் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது என்பதும் பிரசித்தி. இதை மெய்ப்பிக்கும் வகையில் சரித்திரக் கதைகளில் பல சம்பவங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவை மொஹலாயர்கள் காலத்தில் ஆண்ட மாமன்னர் அக்பரின் அவைக்களப் பாடகராக விளங்கிய தான்சேன் இசைபாடி நோயாளிகளைக் குணப்படுத்திய்ள்ளதற்கும் தீப் எனும் ராகத்தில் பாடி அகல் விளக்கை எரிய வைத்ததற்கும் சான்றுகள் உள்ளன. 

இசையை வெறுத்தவர் மொஹலாய மன்னர்களுள் ஒருவரான ஔரங்கசீப் என்பதும் பிரசித்தம். உண்மையில் அவர் இசையை வெறுக்கவில்லை, மனிதர்களையே வெறுத்தார் என்பதை அவரது வரலாற்றை அறிந்தவர் பலரும் ஒத்துக்கொள்வர். ஒரு முறை சிலர் வாத்தியங்களுடன் இசைமீட்டிப் பாடியவண்ணம் செல்கையில் அவர்களை எதேச்சையாக அவ்வழியே வந்த ஔரங்கசீப் மன்னர் கண்டு, என்ன செய்கிறீர்கள் என அதட்டிக் கேட்கையில் அவர்கள், அவரது கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டி "இசையைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறோம்" என்று சமயோசிதமாக பதில் சொன்னார்களாம். அதற்கு ஔரங்கசீப், "நன்கு மிகவும் ஆழமாகத் தோண்டிப் புதையுங்கள், வெளியே வந்துவிடப் போகிறது" என்றாராம். இக்கதையை எனக்குக் கூறியவர் எனது தந்தை ஆவார். 

இயல்பாகவே சிறுவயது முதலே நான் இசையில் மிக்க ஈடுபாட்டுடன் இருப்பவன். என் தந்தையிடம் நான் முறையாக இசைபயில விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் கேட்கையில் இக்கதையைக் கூறி என் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். இசையை நான் மறக்கவில்லை, தொடர்ந்து இசையைக் கேட்டும், பாடியும் புல்லாங்குழல், புல்புல் தாரா, மவுத் ஆர்கன் முதலிய வாத்தியங்களில் வாசித்தும் வருகிறேன். அதே சமயம் ஔரங்கசீப் கதையையும் நான் மறவாது அவ்வப்பொழுது நினைவில் கொள்வதுண்டு. இவ்வாறு இசை என் வாழ்வில் இசைந்து விளங்குவதால் இவ்வுலகில் நேரும் சிறுசிறு துன்பங்களைக் கண்டு துவளாமல் என்றும் இன்பமாய் வாழ என்னால் முடிகிறது.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த இசையை நாம் நாள்தோறும் கேட்டு மகிழ்ந்து நமது அன்றாட வாழ்வில் நாம் உறும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மனதை எப்பொழுதும் மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வது நலம் பயப்பதாகும். ஏதேனும் சோகமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் சோகரசம் ததும்பும் இசையைக் கேட்டு நம் சோகத்தால் விளையும் துன்பத்தையும் நம்மால் கடக்க இயலும். அனைத்திற்கும் மேலாக மனிதகுலம் இறைவனடியைப் பணிந்துய்ய இசை மிகவும் ஏதுவானதொரு சாதனமாகும். 

நன்றி:
http://www.thamizhisai.com

திரைப்படம்: மோகமுள் (1995)
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயக்கம்: ஞான ராஜசேகரன்
நடிப்பு: அபிஷேக், அர்ச்சனா ஜோலெக்கர்


ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ

கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் 
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான 
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும் 
கமலம்

ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் விழித்துக் கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை நடத்தும்
வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை மயக்கும்
இதமான இளங்காற்று எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசை ஞானம் மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க 
அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான 
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும் 
கமலம்

நாவாறப் பெரியோர் நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம் திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில் தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த தலம் இந்தத் தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால் துதித்தால் 
தலமொரு இசைநயங்களை வழங்கிய

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான 
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும் 
கமலம் பாத கமலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக