பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 15 நவம்பர், 2013

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்

 நன்றி www.koodal.com/tamil/research/articles.asp?id=264&content=tamil&name=tamil-online
முத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்தினம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் திரைக்கதை உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வளையாபதி - மூலக்கதை: ஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான். திரைக்கதை அமைப்பு: காப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்பட்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை. கதை மாற்றம்: மூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபதி குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான். பாத்திரப்படைப்பு: திரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர். உரையாடல் திறன்: திரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக, குழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி, சுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா? வளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா? பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா? வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா? சுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்! வளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா? தேக்கு மரத்தில் சந்தனம்! வெற்றுச் சிப்பியில் முத்து....! சுந்தரி : (கண்ணீருடன்) நான் மலடி! வெற்றுச் சிப்பி! தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி நண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல். சத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா? வளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா? சத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள். வளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்! என் பெயர் வளையாபதி அப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா? என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன. முடிவுரை: பாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும். நன்றி: கட்டுரை மாலை
டி எம் எஸ் அவர்களுக்கு இது ஆரம்ப கால பாடல். ஆகையால் நன்றாக அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது.
ஜமுனா ராணி ரொம்பவும் இலகுவாக பாடியிருக்கிறார்.

இசை S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம் என்றாலும் இந்தப் பாடலுக்கு சுநதரம் இசையமைத்திருப்பதாக அறிகிறேன்.

கொஞ்ச காலம் பின்னரும் இதே மேட்டில், டி எம் எஸும், சுசிலா அம்மாவும் ஒரு பாடல் பாடியிருக்கின்றனர். இப்போது நினைவுக்கு வரவில்லை.

திரைப் படம்: வளையாபதி (1952)
குரல்கள்: டி எம் எஸ்,  K ஜமுனா ராணி
பாடல்: பாரதிதாசன்
இசை: S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம்
நடிப்பு : G முத்துகிருஷ்ணன் , சுந்தரியாக T A. ஜெயலக்ஷ்மி, சத்யவதியாக சௌகார் ஜானகி, உத்தமனாக ராமகிருஷ்ணா
இயக்கம்: T R சுந்தரம்


http://asoktamil.opendrive.com/files/Nl8yNTcyMjk3MF9EenZCQV83ZGEz/Kulungidum%20poovilellaam.mp3
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அரும்பாய் முல்லைக் கொடி ஓடி தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

ஆதலால் இன்ப வாழ்வு கைக் கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்

சேர்ந்தே இன்பமெல்லாம் வாழ்ந்தே வாழ்ந்திடிவோம்
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்
ஓ ஓ
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்

என் போல் பாக்யவதி யாருமில்லை உலகினிலே
இன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே

ஓ ஓ ஓ ஓ ஓ

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே


1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

மிகவும் இனிய பாடல் !! என் பெற்றோருக்கு விருப்பமான பாடல். இந்த பாடலை சுசீலா அம்மா பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று ஒரு எண்ணம். இதே மெட்டில் ஒரு இந்தி பாடலும் உள்ளது.

கருத்துரையிடுக