பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 ஜூலை, 2014

உணவு செல்லவில்லை சகியே

இதுவரை மகா கவி பாரதியார் பாடல்களை தமிழ் படங்களில் இசையமைப்பாளர்கள் மிக அருமையாக, கவனமாக  கையாண்டிருந்தார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் பாடலை (இறுதியாக இருக்கும் காணொளி) கேட்ட பிறகு நமது இசையமைப்பாளர்களில் ஒருவர்  அவரது பாடலை கொலை செய்ய இதோ இருக்கிறார் என்று தெரிய வந்தது. 
இதற்காகவே திருமதி ஜமுனா ராணியும் திருமதி ஜிக்கியும் குழுவினருடன் பாடியுள்ள அதே பாடலை இங்கே இணைத்திருக்கிறேன். இது நமது ஆறுதலுக்காக.
இந்தப் பாடல் தனி பாடலா அல்லது திரைப்படத்திற்காக பாடப்பட்டதா எனத் தெரியவில்லை.

இது பாரதியின் கண்ணன் பாட்டு, கண்ணன் என் காதலன், (செஞ்சுருட்டி-திஸ்ர ஏகதாளம்.)
சிருங்கார ரசம்.
இந்த பாடலின் சினிமா காட்சி பிடிக்காதவர்களுக்கு பாரதியின் கண்ணன் பாடலை முழுசாக இங்கே கொடுத்திருக்கிறேன்.

என்ன சொன்னாலும் கங்கை அமரன் கங்கை அமரன் தான். அவரை மிஞ்ச தமிழ் திரை உலகில் யாரும் இல்லை. இந்தப் படத்தின் தலைப்பு பாடல் ஒன்று போட்டிருக்கிறார். ஐயப்பன் பக்தர் வீரமணியின் பாடல் உல்ட்டா பண்ணியிருக்கிறார். பாவம் தமிழ் திரை உலகம். இன்னும் வாரிசுகள் வேறு....


திரைப் படம்: சம்சாரமே சரணம் (1989)
இசை: கங்கை அமரன்
நடிப்பு: யோகராஜ், ரஞ்சனி
இயக்கம்: ஜீவபாலன்
பாடல்: மகா கவி பாரதியார் (பாவம் )
தூண்டிற் புழுவினைப்போல்
வெளியே
சுடர் விளக்கினைப்போல்
நீண்ட பொழுதாக
எனது
நெஞ்சந் துடித்த தடீ
கூண்டுக் கிளியினைப்போல்
தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளையெல்லாம்
மனது
வெறுத்து விட்டதடீ


பாயின் மிசைநானும்
தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும்
சகியே
சலிப்பு வந்ததடி
வாயினில் வந்ததெல்லாம்
சகியே
வளர்த்துப் பேசிடுவீர்
நோயினைப் போலஞ் சினேன்
சகியே
நுங்க ளுறவையெல்லாம்.   

கேளாதிருப்பான்

உணவு செல்லவில்லை
சகியே
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை
சகியே
மலர் பிடிக்கவில்லை
குண முறுதியில்லை
எதிலும்
குழப்பம் வந்ததடீ
கணமும் உள்ளத்திலே
சுகமே
காணக் கிடைத்ததில்லை

பாலுங் கசந்ததடீ
சகியே
படுக்கை நொந்ததடீ
கோலக் கிளிமொழியும்
செவியில்
குத்த லெடுத்ததடீ
நாலு வயித்தியரும்
இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்
பாலத்துச் சோசியனும்
கிரகம்
படுத்து மென்றுவிட்டான்

கனவு கண்டதிலே
ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்கவில்லை
எவனோ
என்னகந் தொட்டு விட்டான்
வினவக் கண்விழித்தேன்
சகியே
மேனி மறைந்துவிட்டான்

மனதில் மட்டிலுமே
புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ

உச்சி குளிர்ந்ததடீ
சகியே
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்
முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ
இச்சை பிறந்ததடீ
எதிலும்
இன்பம் விளைந்ததடீ
அச்ச மொழிந்ததடீ
சகியே
அழகு வந்ததடீ

எண்ணும்பொழுதி லெல்லாம்
அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ
புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன்
அவன்தான்
யாரெனச் சிந்தைசெய்தேன்
கண்ணன் திருவுருவம்
அங்ஙனே
கண்ணின்முன் நின்றதடீ

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாரிசுகள் இம்சை தான் தாங்க முடியவில்லையே...

பாடல் இணைப்புகளுக்கு நன்றி ஐயா...

Unknown சொன்னது…

உண்மையான வார்த்தைகள் தனபாலன் சார்..

NAGARAJAN சொன்னது…

ஜமுனா ராணி பாடிய இப்பாடல் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வருகின்றது.

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் சார்

கருத்துரையிடுக